3,360 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள், புகையிலை பொருட்கள் பறிமுதல் * 2 பேர் அதிரடி கைது * சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார் பேரணாம்பட்டு வழியாக கார்களில் கடத்தி வந்த
பேரணாம்பட்டு, அக்.31: பேரணாம்பட்டு வழியாக கார்களில் கடத்தி வந்த 3,360 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர எல்லையை ஒட்டி அமைந்துள்ள பத்தலப்பல்லி சோதனைச்சாவடியில் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 10 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், புகையிலை பொருட்களை கடத்தி வந்த கர்நாடக மாநிலம், பாரதியார் நகரை சேர்ந்த மொஹபூப் உசேன்(36) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல், அரவாட்லா மலைப்பாதை வழியாக ரோந்து சென்றபோது, அவ்வழியாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதையடுத்து, சினிமா பாணியில் பைக்கில் விரட்டி சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, உடனே பத்தலப்பல்லி சோதனைச்சாவடியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் அங்கு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இதனால் அங்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றிருப்பதை பார்த்த காரில் வந்த மர்ம ஆசாமி, காரை திருப்பிக் கொண்டு பேரணாம்பட்டு நோக்கி விரைந்து சென்றார். இதற்கிடையில், பத்தலப்பல்லி அடுக்குமாடி குடியிருப்பு அருகே சாலையோரம் நின்றிருந்த இன்ஸ்பெக்டர் பிரபு, அங்கிருந்த கல்லை எடுத்து அவ்வழியாக வந்த கார் கண்ணாடி மீது வீசினார்.
இதனால் கார் கண்ணாடி உடைந்ததில் நிலை தடுமாறிய மர்ம ஆசாமியின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் தடுப்பில் மோதி நின்றது. இதையடுத்து காரில் இருந்து இறங்கி தப்பியோட முயன்ற மர்ம ஆசாமியை இன்ஸ்பெக்டர் பிரபு விரட்டி சென்று மடக்கி பிடித்தார். அப்போது இன்ஸ்பெக்டர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர், அந்த காரை சோதனை செய்தபோது பெட்டிகளில் 3,360 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்தவர் கர்நாடக மாநிலம், முல்பாகால் பகுதியை சேர்ந்த வெங்கட்ட பிரசன்னா(31) என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், அவர் கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை வேலூரில் உள்ள சில்லறை கடைகளுக்கு விற்பனை கொண்டு செல்வதாகவும், கர்நாடகாவை சேர்ந்த பார் உரிமையாளர் நாகராஜ் என்பவரிடம் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், அவற்றை பேரணாம்பட்டு கோட்டைச்சேரி பகுதியை சேர்ந்த மைக்கேல், கார்த்திக் என்பவர்களிடம் கொடுக்க கொண்டு செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு போலீசார் வழக்கு பதிந்து மொஹபூப் உசேன், வெங்கட்ட பிரசன்னா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், கர்நாடக மாநில பார் உரிமையாளர் நாகராஜ் மற்றும் பேரணாம்பட்டு கோட்டைச்சேரி பகுதியை சேர்ந்த மைக்கேல், கார்த்திக் ஆகிய 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
