2.98 லட்சம் மாணவர்கள் அடிப்படை கற்றல் திறன் பெற்றுள்ளனர் வேலூர் மாவட்டத்தில் 28 சதவீதம் பேர் 6 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்கம் மூலம்
வேலூர், அக்.31: 6 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்கம் மூலம் 2.98 லட்சம் மாணவர்கள் அடிப்படை கற்றல் திறன் பெற்றுள்ளனர். அவர்களில் வேலூர் மாவட்டத்தில் 28 சதவீதம் பேர் கற்றல் திறன் பெற்றுள்ளனர்.
மாநில திட்டக்குழு கடந்த பிப்ரவரி மாதம், மாநில அடைவு ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் 6ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் வரையில் கணக்கெடுக்கப்பட்டது. அதில் அடிப்படை கற்றல் திறன் இல்லாத மாணவர்களை கண்டறிந்தனர். அவர்கள் கற்றல் திறனை பெறுவதற்காக திறன் இயக்கம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் கற்றல் திறன் இல்லாத மாணவர்களுக்கு மாதந்தோறும் அடைவுத்தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்களின் திறன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் மாணவர்களுக்கு அடைவுத்தேர்வு நடத்தப்பட்டது. அதில் வேலூர் மாவட்டத்தில் 16,812 மாணவர்களில் 4,712 மாணவர்கள் (28 சதவீதம்) பேர் அடிப்படை கற்றல் திறன் பெற்றுள்ளனர்.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் 38,081 மாணவர்களில் 12,413 மாணவர்கள் (33 சதவீதம்) அடிப்படை கற்றல் திறன் பெற்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 14,862 மாணவர்களில் 6,861 மாணவர்களும் (46 சதவீதம்) ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13, 666 மாணவர்களில் 4,999 மாணவர்கள் (37 சதவீதம்) பேர் கற்றல் திறன் பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் 6 முதல் 9ம் வகுப்பு பயிலும் 7.46 லட்சம் மாணவர்களுக்கு கற்றல் திறன் இயக்கம் மூலம் அடைவுத்தேர்வு நடத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொண்டதன் அடிப்படையில், 2.98லட்சம் மாணவர்கள் (40 சதவீதம்) கற்றல் திறன் பெற்றுள்ளனர். அதேபோல் மாநிலம் முழுவதுமாக மீதமுள்ள மாணவர்களுக்கும் கற்றல் திறன் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
