வீட்டின் வெளியே நிறுத்திய பைக் திருட்டு சிசிடிவி மூலம் மர்ம நபருக்கு வலை பேரணாம்பட்டு அருகே
பேரணாம்பட்டு, ஆக.30: பேரணாம்பட்டு அடுத்த காயிதே மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் முஹம்மத் யூனுஸ். இவர் கோயம்புத்தூரில் உள்ள பள்ளி வாசலில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் பேரணாம்பட்டிற்கு தம்பியின் திருமணத்திற்காக வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு தூங்கச்சென்றார். நேற்று காலை வீட்டிற்கு வெளியே பார்த்தபோது பைக் திருட்டுப்போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த நிலையில் வீட்டின் அருகே பொருத்தியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் பைக்கை திருடி சென்றது பதிவாகியிருந்தது. இதுகுறித்து யூனுஸ் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், பேரணாம்பட்டு பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, டிராக்டர், பேட்டரிகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டுப்போவதால் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.