வேலூரில் இருந்து 250 போலீசார் ராமநாதபுரம் பயணம் தேவர் குரு பூஜையையொட்டி
வேலூர், அக்.28: தேவர் குரு பூஜையையொட்டி பாதுகாப்பிற்காக வேலூரில் இருந்து 250 போலீசார் ராமநாதபுரத்திற்கு பயணம் மேற்கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் இன்று முதல் 30ம் தேதி வரை முத்துராமலிங்கதேவரின் 63வது குருபூஜை விழா மற்றும் 118வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அதன்படி இன்று யாகசாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது. வரும் 30ம் தேதி அரசு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மரியாதை செலுத்துகிறார். இதையொட்டி அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் ராமநாதபுரத்திற்கு சென்றுள்ளனர். அதேபோல் வேலூர் மாவட்டத்தில் இருந்து டிஎஸ்பி நந்தகுமார் தலைமையில் 250 போலீசார் நேற்று ராமநாதபுரத்திற்கு சென்றனர். பாதுகாப்பு பணி முடிந்து மீண்டும் வரும் 31ம் தேதி வேலூருக்கு திரும்புவார் என போலீசார் தெரிவித்தனர்.