கருவை கலைக்கும்படி காதல் கணவர் துன்புறுத்தல் எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் புகார்
வேலூர், அக்.28: கருவை கலைக்கும்படி துன்புறுத்தும் காதல் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார். வேலூர் வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள். இவர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் வசந்தபுரம் பகுதியில் வசித்து வருகிறேன். பாகாயம் பகுதியை சேர்ந்த ராஜா மகன் அருணாசலம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். தற்போது 7மாத கர்ப்பிணியாக உள்ளேன். இந்நிலையில் எனது கருவை கலைக்கும்படி கணவரின் தம்பி அழுத்தம் கொடுக்கிறார். இதனால் எனது கணவர் கருவை கலைக்கும்படி என்னை தொந்தரவு செய்கிறார். இதற்கு நான் மறுத்தபோது, என்னை கர்ப்பிணி என்றும் பார்க்காமல் கணவர் சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து வடக்கு போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது கணவர், அவரது தம்பி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.