9.63 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு 37,075 மையங்களில் 14ம் தேதி நடக்கிறது புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ்
வேலூர், நவ.27: தமிழகத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 9.63 லட்சம் பேருக்கு வரும் 14ம் தேதி அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளி செல்லாத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கடந்த 2022ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களை கொண்டு வரும் 2027ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இத்திட்டத்தின் கீழ் முதல் 3 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நடப்பு 2025-2026ம் கல்வியாண்டில் ரூ.25.80 கோடியில் 15 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்க பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்குநரகம் முடிவு செய்தது. இதனையடுத்து முதல்கட்டமாக 5,37,876 கற்போர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் முதல் பயிற்சி அளிக்கப்பட்டு, கடந்த ஜூன் 15ம் தேதி அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக 9.63 லட்சம் பேருக்கு, வரும் 14ம் தேதி அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, தேர்வை சிறந்த முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் சுகன்யா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: நடப்பு 2025-26ம் ஆண்டில் எழுதப்படிக்கத் தெரியாதோர் அனைவரையும் முழுமையாகக் கண்டறிந்து, அவர்கள் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு கல்விகற்கும் வாய்ப்பை வழங்கிடும் வகையில் திட்டச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், முதற்கட்டத்தில் 5,37,876 பேருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2ம் கட்டமாக கண்டறியப்பட்ட 2,05,012 ஆண்கள், 7,58,151 பெண்கள், 8 திருநங்கைகள் என மொத்தம் 9,63,171 பேருக்கான அடிப்படை எழுத்தறிவு கல்வி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள 37,075 கற்போர் எழுத்தறிவு மையங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
தன்னார்வலர்களின் உதவியுடன் 200 மணி நேரகற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் கடந்த ஜூலை மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு வரும் டிசம்பர் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வரை எழுத்தறிவு மையமாக செயல்படும் பள்ளிகளில் நடக்கிறது. அனைத்து கற்போரும் 100 சதவீதம் இத்தேர்வில் கலந்துகொள்ளும் வகையில் உரிய நடவடிக்கைகளை எழுத்தறிவு மையம் சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர், தலைமை ஆசிரியர், பள்ளி உதவி ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.