மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் வாகனங்கள் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் 17 வாகனங்கள் அதிக விலையால் விற்பனையாகவில்லை வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில்
வேலூர், நவ.27: வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நடந்த மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. 17 வாகனங்கள் அதிக விலையால் ஏலம் போகவில்லை. வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய கடத்தல், மதுபாட்டில்கள் கடத்தல், போதை பொருள் கடத்தல் என பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏலம் விடப்படுகிறது. அதன்படி, நேற்று வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 57 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் என்று 58 வாகனங்களும், கஞ்சா கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 24 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, ஒரு கார் என்று 26 வாகனங்கள் என மொத்தம் 84 வாகனங்களின் ஏலம் வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நேற்று காலை 10 மணியளவில் தொடங்கி மாலை 3 மணி வரை நடந்தது. இதில் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு வாகனங்கள் ஏலம் போனது. 17 வாகனங்கள் அரசு நிர்ணயித்த ஏலத்தொகை அதிகம் என்பதால் விற்பனையாகவில்லை. வாகன ஏலத்தை எஸ்பி மயில்வாகனன் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில், மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் காவல்அதிகாரிகள் நடத்தினர். இந்த ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.