காட்பாடி மேம்பாலம் அகலப்படுத்தும் பணிகள் ஒரு வாரத்தில் தொடங்கும் சட்டமன்ற பொது கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை உறுதி வேலூர் போக்குவரத்தில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை
வேலூர், செப்.27: காட்பாடி ரயில்வே மேம்பாலம் அகலப்படுத்தும் பணி அடுத்த வாரம் பணி தொடங்கி 8 மாத காலத்தில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்டத்தில் அரசுத்திட்டப்பணிகள் குறித்து களஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற பொதுக்கணக்குக்குழு தலைவர் செல்வபெருந்தகை கூறினார். சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்குக்குழு வேலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் நடந்து வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்த நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் சுப்புலட்சுமி உட்பட அனைத்துத்துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
ஆய்வு கூட்டத்துக்கு பின்னர் சட்டமன்ற பொதுக்கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: மாவட்டத்தில் எங்கள் குழு மேற்கொண்ட கள ஆய்வின் போது 14 துறைகள் சம்மந்தமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்தும் பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். அடுத்த ஒரு வாரத்தில் பணிகள் துவங்கி விரைந்து 8 மாதத்தில் முடிப்பதாக சொல்லியுள்ளார்கள். இதற்க்காக ரூ.44 கோடி ஒதுக்கியுள்ளார்கள். சமூக நல விடுதிகளில் ஈக்கள் மொய்க்கும் நிலை உள்ளது. அவற்றை சுத்தமாக வைத்து பராமரிக்க உத்தரவிட்டுள்ளோம். அதேபோல தேசிய நெடுஞ்சாலைகள் சேதம் அடைந்துள்ளது. அவற்றையும் முறையாக சீர்செய்தும் மேம்பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தி உள்ளோம்.
வேலூர் ஒரு வளர்ந்து வரும் நகரமாக இருப்பதால் தீயணைப்புத்துறைக்கு தேவையான ஸ்கை லிப்ட் வாங்க பரிந்துரை செய்துள்ளோம். வேளாண் துறையை பொறுத்தவரை வேலூர் மாவட்டத்தில் சிறப்பாக உள்ளது. வேளாண் துறையில் முன்னோடி மாவட்டமாகவே வேலூர் உள்ளது. அந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். அதே சமயம் குற்றம் குறைந்துள்ளது. போக்குவரத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. அவற்றுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.