பெண் குழந்தையை கால்வாயில் வீசிய தந்தை, பாட்டி கைது சிசிடிவி கேமரா காட்சிகளால் சிக்கினர் வேலூர் பென்ட்லண்ட் மருத்துவமனை அருகே
வேலூர், நவ.26: வேலூர் பென்ட்லண்ட் மருத்துவமனை அருகே பெண் குழந்தையை கால்வாயில் வீசிய தந்தை, பாட்டி ஆகிய 2 பேரை கைது செய்தனர். வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனை சாலை வழியாக நேற்று முன்தினம் காலை சென்றவர்கள், மருத்துவமனை காம்பவுண்ட் சுவரை யொட்டியுள்ள கால்வாயில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தை சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த வேலூர் தெற்கு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜிபிஎச் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
கால்வாயில் வீசப்பட்டிருந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருக்கும் என்பதால் அரசினர் பல்நோக்கு மருத்துவமனையிலோ அல்லது அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலோ பிறந்திருக்கலாம் என்பதால், தங்கள் விசாரணையை ஜிபிஎச் பல்நோக்கு மருத்துவமனை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில் குழந்தையை ஒரு ஆண் தூக்கிச் சென்று கால்வாயில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், அந்த நபர் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த வினோத்(25) என்பதும், இவரது மனைவிக்கு கடந்த 22ம் தேதி காலை 11.30 மணிக்கு அறுவை சிகிச்சையின் போது 7 மாத பெண் குழந்தை இறந்ததே பிறந்ததும் தெரியவந்தது. பின்னர், மருத்துவர்கள் இறந்த குழந்தையை வினோத்திடம் கொடுத்துள்ளனர். பின்னர் வினோத் மற்றும் அவரது தாய் சுமதி(55) ஆகிய 2 பேரும் இறந்த குழந்தையை மருத்துவமனை அருகே கால்வாயில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதை அவர்கள் விசாரணையில் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.