காரில் கடத்திய 110 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது காட்பாடியில்
வேலூர், அக்.25: காட்பாடியில் காரில் 110 கிலோ குட்கா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தை போதை இல்லாத மாவட்டமாக மாற்ற எஸ்பி மயில்வாகனன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து வேலூருக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் வடுகன்குட்டை வழியாக காரில் குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக காட்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்றுமுன்தினம் மாலை வடுகன்குட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 110 கிலோ குட்கா கடத்தியது தெரிய வந்தது. காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் காட்பாடி, வடுகன்குட்டை பகுதியைச் சேர்ந்த அமர்ராம் (34), கே.வி.குப்பம் அடுத்த வேலம்பட்டை சேர்ந்த விக்னேஷ்(30) என்பது தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து குட்கா பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.