இன்ஜினியரிங் சீட் வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது காட்பாடி தனியார் கல்லூரியில்
வேலுார், அக்.25: காட்பாடி தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் சீட் வாங்கி தருவதாக மோசடி செய்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த ஒருவரின் மகளுக்கு, காட்பாடி தனியார் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பொய்கையை சேர்ந்த இருவர் வேலூருக்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் அதற்கு 10 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் கூறியுள்ளனர். அதை நம்பி வேலூருக்கு வந்தவர்களிடம், அனுமதி கடிதம் ஒன்றை நபர் ஒருவர் கொடுத்துள்ளார். அந்த கடித்தை வாங்கிய சென்னையை சேர்ந்தவர் அதுகுறித்து கல்லூரியில் விசாரித்துள்ளார். விசாரணையில், அந்தக் கடிதம் போலி என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நபர், சம்பந்தப்பட்ட ஆசாமிகளுக்கு பணம் கொடுக்காமல் சென்னைக்கு திரும்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் சார்பில் பிரம்மபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலி அனுமதிக் கடிதம் கொடுத்த பொய்கையை சேர்ந்த ரமேஷ்(46) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில், ‘தான் கடிதம் மட்டுமே கொடுத்ததாகவும், அதற்காக 1,000 ரூபாய் பணம் கொடுத்தார்கள்’ எனவும் தெரிவித்துள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.