பள்ளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலி ஊராட்சி மன்ற நெற்களம் கட்டத் தோண்டிய
பொன்னை, அக். 24: காட்பாடி தாலுகா வள்ளிமலை அடுத்த அம்மவார்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி ஜமுனா. இவர்களுக்கு ரேஷ்மா(8), ரமேஷ்(6), அன்பு (4) என மூன்று குழந்தைகள். அதில் ரமேஷும், அன்புவும் நேற்று பிற்பகல் அம்மவார்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் இவர்களது அக்கா ரேஷ்மா படிக்கும் பள்ளிக்கு சென்று உள்ளனர். அப்போது பள்ளி வகுப்பறை நடந்து கொண்டு இருந்தது. இதனை அடுத்து ரமேஷும், அன்புவும் அப்பகுதியில் ஊராட்சி மன்ற நெற்களம் கட்டும் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதில் அப்பகுதியில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் அன்பு தவறி விழுந்துள்ளார். இதில் மழை காரணமாக தண்ணீர் தேங்கி இருந்தது. இதனை அடுத்து ரமேஷ் தனது தம்பியை காப்பாற்றுவதற்கு முயன்று கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குழந்தை மீட்டு 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது, ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் பரிசோதனை செய்தபோது குழந்தை இறந்து விட்டதாக கூறியதையடுத்து, மேல்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் எஸ்ஐ குமரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.