மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல் போலீசார் சமரசம் சாயிநாதபுரம், கன்சால்பேட்டை பகுதிகளில்
வேலூர் அக்.23: வேலூர் சாயிநாதபுரம், கன்சால்பேட்டை பகுதிகளில் தெருக்களில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாநகராட்சி சாயிநாதபுரம் ஆர்.வி.நகர், சிதம்பரனார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தெருக்களில் தேங்கி நிற்பதாகவும், வீடுகளுக்குள் புகுந்ததாகவும் அதனை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் நேற்று வேலூர்-ஆரணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது சில வாகன ஓட்டிகள், பணிக்கு செல்ல நேரம் ஆகிவிட்டது என்றும், மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்களுக்கு இடையூறாக மறியல் நடத்தக்கூடாது என மறியலில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் அங்கு வந்து மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்தனர். இதையேற்று சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து ஜேசிபி மூலம் மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. அதேபோல், நேற்று கன்சால்பேட்டையில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வேலூர்- பெங்களூரு சாலை மாங்காய் மண்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தாசில்தார் வடிவேலு, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்குள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.