வீட்டின் பீரோ உடைத்து ரூ.1.30 லட்சம், 12 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது
ஒடுகத்தூர், ஆக.22: ஒடுகத்தூர் அருகே விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது நேற்று பட்டப்பகலில் வீட்டின் பீரோ உடைத்து ரூ.1.30 லட்சம் பணம் மற்றும் 12 சவரன் நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வலையல்காரபட்டி கிராமத்தை சேர்ந்தவர் எல்லம்மாள்(49), கூலித்தொழிலாளி. இவருக்கு மகன் பிறந்து 7 மாதங்களிலேயே கணவர் அப்பாவி என்பவர் இறந்து விட்டார். அன்று முதல் எல்லம்மாள் தனது ஒரே மகன் வெங்கடகுமரனுடன் வசித்து வந்தார். தற்போது, மகன் வெங்கடகுமரனுக்கும், வாணியம்பாடி அருகே உள்ள திம்மாம்பேட்டை பகுதியை சேர்ந்த பிரவீனா என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணமாகி உள்ளது.
இந்நிலையில், நேற்று மகன் வெங்கடகுமரன் மதுரையில் நடக்கும் விஜய் மாநாட்டிற்கும், மருமகள் பிரவீனா அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால், தனியாக இருந்த எல்லம்மாள் நேற்று மாலை வீடு மற்றும் கேட்டை பூட்டி விட்டு அருகே உள்ள தனது அண்ணன் விவசாய நிலத்தில் களை எடுப்பதற்காக சென்றுள்ளார். பிறகு, வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது கேட் மற்றும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு எல்லம்மாள் அதிர்ச்சியடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் அறை முழுவதும் சிதறி கிடந்துள்ளது. மேலும், பீரோ உள்ளே வைத்திருந்த சுமார் 12 சவரன் நகை மற்றும் ரூ.1.30 லட்சம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்று இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து, உடனே வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் தலைமையிலான போலீசார் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பாக எல்லம்மாள் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், திருட்டு நடந்த பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி மர்ம ஆசாமிகள் யார் என்று சோதனை நடத்தி வருகின்றனர்.