2 யூனிட் மணல் பறிமுதல் கட்டிட கான்ட்ராக்டர் கைது சத்துவாச்சாரியில்
வேலூர், ஆக.21: வேலூர் சத்துவாச்சாரியில் கட்டிடம் கட்டுவதற்காக ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து குவிக்கப்பட்டிருந்த மணல் கைப்பற்றப்பட்டு கட்டிட கான்ட்ராக்டர் கைது செய்யப்பட்டார். வேலூர் சத்துவாச்சாரி வஉசி நகரில் மத வழிபாட்டுத்தலம் கட்டுவதற்கான பணி நடந்து வருகிறது. இப்பணியை வேலூரை சேர்ந்த கட்டிட கான்ட்ராக்டர் முருகன்(52) என்பவர் எடுத்து செய்து வருகிறார். இக்கட்டிட பணிக்காக ஆந்திராவில் இருந்து ஆற்று மணலை கடத்தி வந்து கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக சத்துவாச்சாரி போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு மணல் குவிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 யூனிட் மணலை கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக கான்ட்ராக்டர் முருகன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.