கழிவறை சுவற்றில் மறைத்து வைத்த செல்போன், பேட்டரி பறிமுதல் ஒரு வாரத்தில் 4 செல்போன்கள் சிக்கியது வேலூர் மத்திய சிறையில்
வேலூர், ஆக.20: வேலூர் மத்திய சிறையில் கழிவறை சுவற்றில் மறைத்து வைத்த செல்போன், பேட்டரியை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு வாரத்தில் 4 செல்போன்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் கைதிகள் பீடி, சிகரெட், கஞ்சா மற்றும் செல்போன்களை பயன்படுத்துகிறார்களா என சிறை காவலர்கள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறை வளாகத்தில் செல்போன் பதுக்கி வைத்து இருப்பதாக நேற்றுமுன்தினம் மாலை சிறை அலுவலர் சிவபெருமாளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரது தலைமையில் சிறை காவலர்கள் மோகன்ராஜ், மணிவண்ணன், அஜித்குமார், பிரகாஷ் ஆகியோர் சோதனை நடத்தினர்.
கோபுரம்-1 பகுதியில் 22 தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள கழிவறையின் சுவற்றின் மேல் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட சிம்கார்டு இல்லாத செல்போன் ஒன்று இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் கோபுரம்-3 அருகே பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு தரையில் மறைத்து வைத்திருந்த செல்போன் பேட்டரியும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறை அலுவலர் சிவபெருமாள் பாகாயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் மற்றும் பேட்டரியை பயன்படுத்தியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செல்போன்கள் சிறைக்குள் செல்வதை தடுக்கும் வகையில் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் சிறைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து செல்போன் சிக்கும் சம்பவம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.