25 ஆயிரத்து 599 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்
வேலூர், ஆக.20: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் 25 ஆயிரத்து 599 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 20வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. வேந்தரும் கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில் 187 முனைவர் பட்டமும், 35 இளங்கலை மற்றும் 24 முதுகலை பாடப்பிரிவு மாணவ, மாணவிகள் என்று மொத்தம் 25 ஆயிரத்து 599 பேருக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டமும் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் ஆண்டறிக்கை வாசித்து வரவேற்றார்.
எம்.எஸ்.ராமையா பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் குல்தீப்குமார் ரெய்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: சாத்தியமற்ற கற்பனைகளை செய்ய துணிபவர்கள்தான் மனித வரம்புகளை மீறுபவர்கள் என்பதையே வரலாறு நிரூபித்துள்ளது. அறிவியல், மருத்துவம், விளையாட்டு, கலைகள், தொழில்நுட்பங்கள் என ஒவ்வொரு துறையிலும் சாத்தியமற்ற கற்பனை செய்து சாதித்தவர்களின் பெயர்கள் நமது வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. கற்பனையின் வரம்புகளை உடைப்பதன் மூலம் உலகை மாற்றியுள்ளனர்.
நமது அறிவு, அமைப்பு சிறந்த கலாச்சாரம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய நமது தேசிய இலக்குகள் மற்றும் முன்னுரிமைகளில் சமரசம் செய்யாமல் உலக மேடையில், இந்தியர்களுக்கு ஒரு இடத்தை வழங்கியுள்ளன. உலகளவில் 4வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. அறிவார்ந்த மனங்களின் திறமையான வளமையமாக இந்தியா உள்ளது. எனவே மாணவர்கள் அனைத்து வாய்ப்புகளையும் முழுமையாக ஆராய்ந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கலெக்டர் சுப்புலட்சுமி, எஸ்பி மயில்வாகனன் ஆகியோர் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதில் பதிவாளர் செந்தில்வேல்முருகன், தேர்வுக்கட்டுபாடு அலுவலர் பாபுஜனார்தனம், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.