போதையில் போலீஸ் பூத்தை அடித்து நொறுக்கியவர் கைது வேலூர் புதிய பஸ் நிலையத்தில்
வேலூர், அக்.18: குடிபோதையில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் போலீஸ் பூத் மற்றும் கடைகளை அடித்து நொறுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தீபாவளியை கொண்டாட வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் வருபவர்களும், வெளியூர் செல்பவர்களும் என பரபரப்பாக பஸ் நிலையம் இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு பஸ்சில் இருந்து குடிபோதையில் இறங்கிய வாலிபர் திடீரென பயணிகளை ஆபாசமாக பேசியும், அச்சுறுத்தும் வகையிலும் கலாட்டாவில் ஈடுபட்டதுடன், சில பயணிகளை தாக்கியுள்ளார்.
இதுதொடர்பாக பயணிகள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருடன், காவல் நிலையத்தில் இருந்து விரைந்து சென்ற போலீசாரும் சேர்ந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீஸ் அவுட் போஸ்ட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போதும் அடங்காத அந்த வாலிபர் போலீசாரையும் ஆபாசமாக பேசி தாக்க முயன்றதுடன், போலீஸ் அவுட்போஸ்ட்டையும், அருகில் இருந்த கடைகளையும் அடித்து நொறுக்கி, அங்கிருந்த தின்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த பாட்டில்களை எடுத்து வீசினார்.
இதனால் போலீசார் அடங்காத அந்த வாலிபரை தங்கள் பாணியில் பிடித்து, காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூரை சேர்ந்த சக்திவேல்(23) என்பதும், அவருக்கு பெற்றோர் இல்லை என்பதும், தனது அக்காள் பராமரிப்பில் இருந்து வருவதும் தெரிய வந்தது. மேலும், இதுபோல் அவர் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம், ரயில் நிலையம் உட்பட பல பொதுஇடங்களில் போதையில் ரகளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த வடக்கு போலீசார் சக்திவேலை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.