ரூ.5.30 லட்சம் மோசடி செய்த தம்பதி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கிராம உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி
வேலூர், செப்.18: கிராம உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5.30 லட்சம் மோசடி செய்த சென்னை தம்பதி மீது நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் எஸ்பி மயில்வாகனன் தலைமையில், சைபர் கிரைம் ஏடிஎஸ்பி அண்ணாதுரை ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில், குடியாத்தம் அடுத்த வளத்தூர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் 10ம் வகுப்பு படித்துவிட்டு டிரைவிங் லைசென்ஸ் பெற்று வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். இந்நிலையில் காட்பாடி அடுத்த காங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர், குடியாத்தத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை செய்வதாகவும், எனக்கு டிரைவர் வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார். அதற்கு பணம் செலாகும் என்றும் தெரிவித்தார். அதன்படி கடந்த 2016ம் ஆண்டு பல்வேறு தவணைகளாக ரூ.1 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் அவர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருகிறார். அவரிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
காட்பாடி வெப்பாலை பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் அளித்த மனுவில், ‘சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த தம்பதியினரிடம் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவர்கள் எனது மகனுக்கு கிராம உதவியாளர் பணி வாங்கி தருவதாக கூறினர். அவர்கள் தெரிவித்தபடி கடந்த 2022ம் ஆண்டு ரூ.5 லட்சத்து 30 ஆயிரத்தை கொடுத்தேன். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் வேலை வாங்கி தரவில்லை. மேலும் பணத்தையும் தரமறுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்’ என தெரிவித்திருந்தார். பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்பவர் அளித்த மனுவில், ‘பேரணாம்பட்டு பகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். போலீசார் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், 50 போலீசாரை நியமிக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதேபோல் பல்வேறு மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு அனுப்பி வைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.