நிலம் மோசடி வழக்கில் சகோதரர்களுக்கு 6 மாதம் சிறை வேலூர் கோர்ட் தீர்ப்பு
வேலூர், ஆக.15: வேலூரைச் சேர்ந்தவர் கிரிராஜ். இவரது மனைவி சாந்தா. தம்பதிகளுக்கு தமிழ்ச்செல்வி, ஜெயந்தி, நிர்மலா என்று 3 மகள்களும், பாஸ்கர், டெல்லி பிரகாஷ், சதீஷ்குமார் என்று 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு சதீஷ்குமார், டெல்லி பிரகாஷ் ஆகியோர் தொழில் தொடங்குவதற்கு குடும்ப சொத்தாக உள்ள 2,800 சதுரடி நிலத்தை கேட்டுள்ளனர். பின்னர், தாய் சாந்தா மற்றும் சகோதரிகளிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு, சதிஷ்குமார், தனது மனைவி ஜெயசுதா பெயருக்கு மாற்றியுள்ளார். மேலும், வீட்டில் உள்ள வெள்ளி பொருட்களையும் சதீஷ்குமார், டெல்லி பிரகாஷ் ஆகியோர் எடுத்துச் சென்றுள்ளனர்.
நிலம் மோசடி தொடர்பாக சாந்தா வேலூர் மாவட்ட நில அபகரிப்பு பிரிவில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள ஜேஎம்2 கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் ஆனந்தபாபு, போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை மோசடி செய்த சகோதரர்கள் சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனையும் ரூ.3,000 அபராதமும், டெல்லிபிரகாஷூக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் இந்திரா மிஷியல் வாதாடினார்.