நெற்பயிரை தாக்கும் தண்டு துளைப்பானை தடுப்பது எப்படி? வேளாண் இணை இயக்குனர் தகவல் வேலூர் மாவட்டத்தில்
வேலூர், அக். 12: நெற்பயிரை தண்டு துளைப்பான் தாக்குதலை தடுப்பது எப்படி? என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்தார். இதுகுறித்து வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் கூறியதாவது:
வேலூர் மாவட்டத்தில் தற்போது சம்பா பருவத்தில் சுமார் 3,500 ஏக்கரில் நெல் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. இப்பருவத்தில் நெற்பயிரில் தண்டு துளைப்பான் தாக்குதல் வாய்ப்பு உள்ளது. அறிகுறிகள்: இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டைக்கூட்டம் காணப்படும். தழைப்பருவத்தில் புழுக்கள் தண்டுகளில் நுழைந்து தண்டுகளை தாக்குவதால் அதன் நடுப்பகுதி காய்ந்துவிடும். இதுவே ‘குருத்து காய்தல்’ எனப்படுகிறது. நன்கு வளர்ச்சியடைந்த பயிரில் முழு தானியக் கதிர்களும் காய்ந்துவிடும். மிஞ்சியிருக்கும் தட்டையான தானியங்களே ‘வெண்கதிர்’ எனப்படுகிறது. குருத்தை பிடித்து இழுக்கும்போது அவை எளிதாக கையோடு வந்துவிடும். பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் வயலில் இருக்கும். கட்டுப்படுத்தும் முறை: முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோடெர்மா ஜப்பானிக்கம் எக்டருக்கு 5 மி.லி வீதம் இரண்டு முறை நாற்றங்காலில் தெளிக்க வேண்டும். நாற்றுக்களை நெருக்கமாக நடுதலை தவிர்க்க வேண்டும். வேப்பங்கொட்டைச்சாறு தெளிக்கலாம். நாற்று நடும்போது நாற்றின் நூனியை கிள்ளி விடுவதால் தண்டுத் துளைப்பானின் முட்டை குவியல் அழிக்கப்படும்.
மேலும் ஒரு எக்டேருக்கு அசிபேட் 75 சதவீதம் SP 666-1000 கி, அசார்டியாக்டின் 0.03 சதவீதம் 1000 மி.லி, கார்போசல்பான் 6 சதவீதம் G 16.7 கி.கி, கார்போசல்பான் 25 சதவீதம் EC 800-1000 மி.லி, கார்டேப்ஹைட்ரோகுளோரைடி 50 சதவீதம் SP 1 கி.கி, குளோரோடேரேனிலிபுருள் 0.4 சதவீதம் G 10 கி.கி, குளோரோனபரிபாஸ் 20 சதவீதம் EC 1.25 லி, பைப்ரினில் 5 சதவீதம் SC 1000-1500 கி, குளோரோடேரேனிலிபுருள் 20 சதவீதம் EC 1.25 லி, பைப்ரினில் 80 சதவீதம் WG 50-62.5 கி.கி., புளுபென்டிமைட் 20 சதவீதம் WG 125 கி, புளுபென்டிமைட் 39.35 சதவீதம் SC 50 கி., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருத்தை தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.