மளிகை கடைக்காரரின் குடும்பத்திற்கு ரூ.25.86 லட்சம் இழப்பீடு வேலூர் கோர்ட் தீர்ப்பு விபத்தில் உயிரிழந்த
வேலூர், ஆக.12: விபத்தில் உயிரிழந்த மளிகை கடைக்காாரின் குடும்பத்திற்கு ரூ.25.86 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. காட்பாடி அடுத்த பெரியபுதூரைச் சேர்ந்தவர் சசிகுமார்(20) மளிகை கடை நடத்தி வந்தார். இவர், கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி காட்பாடி-சித்தூர் சாலையில் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றார். பைக்கை அவரது நண்பர் ராஜசேகர் ஓட்டினார். கல்புதுார் பிடிஓ அலுவலகம் எதிரே சென்றபோது, எதிரே வந்த பைக், எதிர்பாராதவிதமாக ராஜசேகர் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சசிகுமார் சென்டர் மீடியனில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தனது மகன் இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி சசிகுமாரின் தாய் சகுந்தலா, வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சாந்தி, மனுதாரர் மகன் இறப்புக்கு எதிரே வந்த பைக் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே கராணம் என்பது தெளிகிறது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.25.86 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் ஒரு மாதத்திற்குள் காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.