ஆசிட் அடிப்பதாக மிரட்டிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை ஒருதலையாக காதலித்த பள்ளி மாணவியின் மீது
வேலூர், ஆக. 12: ஒருதலையாக காதலித்த பள்ளி மாணவியின் மீது ஆசிட் அடிப்பதாக மிரட்டிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. குடியாத்தம் அடுத்த கஸ்பா கவுதம்பேட்டையை சேர்ந்தவர் பிரவீன்(19), பைக் மெக்கானிக். இவர் 11ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். அந்த மாணவிக்கு பிரவீன் செல்போன் ஒன்றை வாங்கினார். அதை அந்த மாணவியிடம் கொடுக்க முடிவு செய்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு சாலையில் நடந்து செல்லும்போது அந்த மாணவியிடம் செல்போனை வலுக்கட்டாயமாக கொடுக்க முயன்றார். அதை வாங்க மறுத்ததால் ஆசிட் அடித்து விடுவதாக மிரட்டி உள்ளார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு வேலூர் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. அதில் பிரவீனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.