பைக் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம நபருக்கு போலீசார் வலை உதவி கேட்க வந்ததுபோல்
வேலூர் நவ.11: காட்பாடியில் ஆதரவற்றோருக்கு உதவி கேட்க வந்ததுபோல் பைக் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். காட்பாடி குமரப்பா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன், பைக் ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா(30). மேல்மாடியில் வசிக்கின்றனர். நேற்று காலை இவர்களது வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், டேபிள் மேல் வைக்கப்பட்டிருந்த ஹேண்ட் பேக்கை திருடி சென்றுள்ளார். அதில் ரூ.2000, 1 சவரன் கம்மல், 1 செல்போன் ஆகியவை இருந்துள்ளது. வீட்டில் இருந்து இறங்கி வரும்போது கீழ் வீட்டில் வசித்து வந்தவர், அந்த நபரிடம் ‘யார் நீ, யாரை பார்க்க வந்தாய்’ என கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர், ஆதரவற்றோருக்கு உதவி கேட்க வந்ததாக கூறிவிட்டு சென்றுவிட்டாராம். இதையறிந்த கிருத்திகா, வீட்டில் வந்து பார்த்தபோது நகை, பணம், செல்போன் இருந்த பையை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கிருத்திகா காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.