கோயில் பூட்டு உடைத்து அம்மன் தாலி திருட்டு குடியாத்தம் அருகே
குடியாத்தம், செப்.11: குடியாத்தம் அருகே கோயில் பூட்டு உடைத்து அம்மன் தாலியை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் அடுத்த ஒலக்காசி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே காளியம்மன் கோயில் உள்ளது. இதில் ஆறுமுகம் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தார். பின்னர் கோயிலை பூட்டி சென்று விட்டார். நேற்று காலை வழக்கம் போல் அம்மனுக்கு பூஜை செய்ய வந்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது காளியம்மன் கழுத்தில் இருந்த 3 கிராம் தங்க தாலி திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கிராம மக்கள் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.