வாலிபரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறிப்பு பிரபல ரவுடியின் மைத்துனர் கைது வேலூர் பாலாற்றங்கரையோரம்
வேலூர், செப்.11: வேலூரில் வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த பிரபல ரவுடியின் மைத்துனரை போலீசார் கைது செய்தனர். வேலூர் புதுவசூரை சேர்ந்தவர் விக்ரம்(29). இவர் பிரபல ரவுடி வசூர் ராஜாவின் மைத்துனர் ஆவார். விக்ரம் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. வேலூர் அடுத்த பொய்கை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (30). இவர் வேலூரில் உள்ள தனியார் ஏஜென்சியில் டெலிவரிபாயாக வேலை செய்து வருகிறார். ஜெயபிரகாஷ் நேற்று முன்தினம் வேலை விஷயமாக புதுவசூர் பாலாற்றங்கரையோரம் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த விக்ரம், ஜெயபிரகாஷை வழிமறித்து தடுத்து நிறுத்தினார். பின்னர் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ஆயிரம் ரூபாயை விக்ரம் பறித்துக் கொண்டார். மேலும் தன் மீது எத்தனை வழக்குகள் உள்ளது என்று உனக்கு தெரியுமா? பணம் பறித்தது குறித்து போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினாராம். இதுகுறித்து ஜெயபிரகாஷ் சத்துவாச்சாரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து புதுவசூரில் பதுங்கி இருந்த விக்ரமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.