கர்ப்பிணியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் சேற்றில் சிக்கியது * கயிறு கட்டி மீட்ட கிராம மக்கள் * ஆம்புலன்சிலேயே குழந்தை பிறந்தது ஒடுகத்தூர் அருகே மலைச்சாலையில்
ஒடுகத்தூர், அக்.10: ஒடுகத்தூர் அருகே மலைச்சாலையில் நள்ளிரவில் கர்ப்பிணியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் சேற்றில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சிலேயே குழந்தை பிறந்தது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட குடிகம் மலை கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பிரேம்குமார்(34). இவரது மனைவி ரோஜா(30). தம்பதிக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ரோஜாவுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ரோஜாவை ஏற்றிக்கொண்டு கட்டிப்பட்டு கிராமம் வழியாக 14 கி.மீ. தூரத்தில் உள்ள ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். ஆனால், சிறிது தூரம் சென்றதும் சேறும் சகதியுமான மண் சாலையில் ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டது. ஆம்புலன்ஸ்சை இயக்குவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டும் நகரவில்லை. பின்னர், ஊர் மக்கள் உதவியுடன் டிராக்டர் மூலம் கயிறு கட்டி ஆம்புலன்சை சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். தொடர்ந்து, அந்த சாலை சேறும் சகதியுமாக இருந்ததால் ஆம்புலன்ஸ் மேற்கொண்டு இயக்க முடியவில்லை. எனவே, அவ்வழியாக செல்வதை தவிர்த்து சுமார் 70 கி.மீ. தூரத்தில் உள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஜமுனாமரத்தூர், போளூர் வழியாக அழைத்து சென்றனர்.
ஆனால், சிறிது தூரம் சென்றதும் வழியில் ரோஜாவிற்கு பிரசவ வலி மேலும் அதிகரித்து ஆம்புலன்சிலேயே அவருக்கு பிரசவம் நடந்தது. இதில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், தாய்க்கும், சேய்க்கும் சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விரைவாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இருவரும் நலமாக உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஒடுகத்தூர் அருகே மலை ஊராட்சிகளில் பல இடங்களில் தார் சாலைகள், சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குடிகம் கிராமத்தில் இருந்து கட்டிப்பட்டு வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் அனைத்து தேவைகளுக்காகவும் ஜமுனாமரத்தூர், போளூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அதேபோல், மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை மற்றும் அவசர தேவைக்கு கூட சாலை வசதி இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். எனவே, மலைவாழ் மக்களின் நலன் கருதி சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனர். நள்ளிரவில் கர்ப்பிணியை அழைத்து செல்ல வந்த ஆம்புலன்ஸ் சேற்றில் சிக்கி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.