கத்தியால் நண்பனை வெட்டியவருக்கு ஓராண்டு ஜெயில்
வேலூர், செப்.10: நண்பனை போதையில் கத்தியால் வெட்டியவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வேலூர் சார்பனாம்பேடு தேவராஜ் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(25). ஓல்டு டவுனை சேர்ந்தவர் சலீம்(26), இருவரும் நண்பர்கள். கடந்த 2012ம் ஆண்டு ஓல்டு டவுன் பில்டர்பெட் டேங்க் அருகே நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் இருந்த சலீம், ராமச்சந்திரனிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ராமச்சந்திரன் பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த சலீம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமச்சந்திரனை வெட்டியுள்ளார். இதில் ராமச்சந்திரன் படுகாயமடைந்தார். இது தொடர்பாக ராமச்சந்திரனின் சகோதரர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று, நீதிபதி சாண்டில்யன், ராமச்சந்திரனை கத்தியால் வெட்டிய சலீமுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.