சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய தந்தையின் நண்பர் கைது பேரணாம்பட்டு அருகே
குடியாத்தம், ஆக.9: பேரணாம்பட்டு அருகே சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய தந்தையின் நண்பர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 9ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் உள்ளார். கடந்த சில தினங்களாக சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரது பெற்றோர் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமி 4 மாதங்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர், குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சிறுமியிடம் நேரில் சென்று விசாரணை செய்தனர். அதில், சிறுமியின் தந்தையின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த ராஜா(40) என்பவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் சிறுமி கர்ப்பம் ஆனது தெரியவந்தது. இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜாவை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.