15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது பேரணாம்பட்டு அருகே ஆசைவார்த்தை கூறி
பேரணாம்பட்டு, ஆக.8: பேரணாம்பட்டு அருகே ஆசைவார்த்தை கூறி 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ஒருபகுதியைச் சேர்ந்த ராஜா (40) கூலி தொழிலாளி. இவரது வீட்டின் அருகே உள்ள அவரது நண்பரின் 15 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி கர்ப்பம் ஆக்கியுள்ளார். இதனையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர்கள் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் குழந்தைகள் நல பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தைகள் நலப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.