வேலூர் மாவட்ட இளைஞரணியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் வேலூர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு தீர்மானம் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல மாநாடு
வேலூர், டிச.7: திருவண்ணாமலையில் வரும் 14ம் தேதி நடைபெறும் வடக்கு மண்டல திமுக இளைஞரணி மாநாட்டில் வேலூர் மாவட்டத்தில் இருந்து இளைஞரணியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வேலூர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. வேலூர் தெற்கு மாவட்ட தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ, கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் வேலூர் மாநகர செயலாளரும் எம்எல்ஏவுமான கார்த்திகேயன், குடியாத்தம் எம்எல்ஏ அமலுவிஜயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், கஜேந்திரன் மற்றும் பிற அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கூட்டத்தில், தேர்தல் ஆணையம் கொடுத்த காலக்கெடுவான ஒரு மாதத்திற்குள் வேலூர் தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட 807 வாக்குச்சாவடிகளிலும் திறம்பட பணியாற்றிய அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பது, வரும் 14ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி மாநாட்டில் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதில் வேலூர் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு, வேலூர் மாவட்டத்துக்கு நல்ல பெயரை ஈட்டித்தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.