ஒளிப்பதிவாளரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வேலூர் கோர்ட் தீர்ப்பு தனியார் தொலைக்காட்சி
வேலூர், நவ.7: வேலூரில் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மகிளா கோர்ட் உத்தரவிட்டது. வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார்(35). இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் வசிக்கும் பகுதியில் கஞ்சா விற்பனை புகார் தொடர்பாக போலீசார் அடிக்கடி சோதனை செய்து வந்துள்ளனர். இதையடுத்து அதேபகுதியை சேர்ந்த திருமலை (36) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகியோர் கஞ்சா விற்பனை குறித்து அசோக்குமார் தான் போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும் என்று கருதி அவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி வீட்டில் இருந்தவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதுதொடர்பாக வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலை மற்றும் 17 வயதுடைய நபரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு வேலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இறுதி விசாரணை நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் விக்னேஸ்வரி ஆஜராகி வாதாடினார். நீதிபதி கோகுலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில் திருமலைக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவனின் வழக்கு சிறார் நீதிமன்றத்தில் தனியே நடந்து வருகிறது.