காட்பாடியில் லாரி வாங்கித்தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்தவர் கைது
வேலுார், ஆக.7: காட்பாடியில் லாரி வாங்கித்தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். காட்பாடி செங்குட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (49). இவர் லாரி உரிமையாளர். இவரிடம் காட்பாடி காந்தி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (48) மற்றும் ராகவன், பத்மநாபன் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகி உள்ளனர். அப்போது தாங்கள் லாரி விற்பனை செய்வதாகவும், லாரி லீசுக்கு வாங்கிக் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் லாரி வாங்கி தருவதாக கூறி ரூ1.05 கோடி பணத்தை கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் முதல், நவம்பர் வரை பல்வேறு கட்டங்களாக கொடுத்துள்ளார். ஆனால் லாரியை வாங்கிக் கொடுக்காமல் 2 ஆண்டுகளுக்கு மேல் ஏமாற்றி வந்துள்ளனர். கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கமால் இழுத்தடித்துள்ளனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் பரசுராமன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவான ராகவன் மற்றும் பத்மநாபனை தேடி வருகின்றனர்.