ஆடுகள் வரத்து குறைந்து ரூ.10 லட்சத்திற்கு வர்த்தகம் ஒடுகத்தூர் வாரச்சந்தையில்
ஒடுகத்தூர், டிச.6: ஒடுகத்தூர் வாரச்சந்தையில் நேற்று ஆடுகள் வரத்து குறைந்து ரூ.10 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது. ஒடுகத்தூர் பேரூராட்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடந்து வருகிறது. சந்தையில் ரூ.30 லட்சம் முதல் 35 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடக்கிறது. கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் மற்றும் திருவிழா நாட்களில் பல லட்சத்திற்கு வர்த்தகம் நடக்கிறது. அதே நேரத்தில் புரட்டாசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் ஆடுகளின் வரத்து குறைந்து விற்பனையும் சற்று மந்தமாக காணப்படும்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று அதிகாலை ஆட்டுச்சந்தை கூடியது. தற்போது கார்த்திகை மாதம் மற்றும் சபரிமலை சீசன் எதிரொலியால் கடந்த வாரங்களை விட இந்த வாரம் ஆடுகள் வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் விலை குறைந்து ஒரு ஜோடி ஆடுகள் ரூ.20 ஆயிரம் வரை விலை போனது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், `ஆடி, ஆவணி மாதங்களில் ஆடுகளின் வரத்து அதிகரித்து வியாபாரமும் நன்றாக இருக்கும். தற்போது சபரிமலை சீசன் மற்றும் தொடர் மழையால் ஆடுகளின் வரத்து குறைந்துள்ளது. வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் ஆடுகளும் விற்பனைக்கு வரவில்லை. இதனால் வியாபாரமும் மந்தமாக நடந்தது. இன்று (நேற்று) நடந்த சந்தையில் கடந்த வாரத்தை காட்டிலும் ஒட்டு மொத்தமாக ரூ.10 லட்சத்துக்கும் குறைவாக தான் வர்த்தகம் நடந்தது என்றனர்.