கேரள வாலிபரிடம் செல்போன் பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை வேலூர் கோர்ட் தீர்ப்பு
வேலூர், நவ.5: கேளர வாலிபரிடம் செல்போன் பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கேரளா மாவட்டம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்சிவர்கீஸ்(24). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் தங்கி நர்சிங் படித்து வந்தார். கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி ஆற்காடு சாலையில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த ஒருவர் அவரது செல்போன், மணிபர்ஸ் வைத்திருந்த கைபையை திருடி சென்றார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் ஆன்சிவர்கீஸ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட காட்பாடி அடுத்த பள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (24) என்பவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள 4வது ஜேஎம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரஞ்சிதா, குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷூக்கு, 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.