திருத்தாளீஸ்வரர் கோயில் திருப்பணியின்போது 4 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு கிராம மக்கள் பரவசம் வேலூர் அடுத்த அன்பூண்டியில் 1000 ஆண்டு பழமையான
வேலூர், ஆக.5: வேலூர் அடுத்த அன்பூண்டியில் ரூ.1.14 கோடியில் துவங்கியுள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருத்தாளீஸ்வரர் கோயில் திருப்பணியின் போது விநாயகர், அம்மன் சிலைகள் உட்பட 4 உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டது கிராம மக்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அடுத்த அன்பூண்டி ஊராட்சியில் 1000 ஆண்டுகள் பழமையான திருத்தாளீஸ்வரர் கோயில் உள்ளது. பிற்கால சோழர் காலத்தை சேர்ந்த இக்கோயில் கட்டிடம் பழுதடைந்து பராமரிப்பின்றி கிடந்தது. இதனை புதுப்பித்து, சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி, அந்த கோயிலை புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் திருப்பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து முறையான பாலாலயம் உட்பட முறையான சம்பிரதாய நடவடிக்கைகள் முடிந்த பின்னர் திருப்பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. நேற்று இக்கோயிலில் ஜேசிபி மூலம் மண்ணை தோண்டிெயடுக்கும் பணி நடந்தது.
அப்போது, ஜேசிபி இயந்திரத்தில் மண் அள்ளும்போது ஒருவித சத்தம் கேட்டுள்ளது. உடனே ஊராட்சி மன்ற தலைவர் உஷாரஜினிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தகவலறிந்து பொதுமக்கள் திரண்டனர். தொடர்ந்து மண்ணை அள்ளும்போது, விநாயகர் சிலை, அம்மன் சிலை, நடராஜர் சிலை, விஷ்ணு சிலை என்று அடுத்தடுத்து அழகிய ேவலைபாடுகள் மிகுந்த 4 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இச்சிலைகள் பஞ்சலோக சிலைகளா அல்லது செப்பு சிலைகளா என்பது தெரியவில்லை. அம்மன் சிலை மட்டுமே சுமார் 2 அடி உயரமும் மற்ற சிலைகள் ஒன்றரை அடி உயரமும் கொண்டுள்ளன. அதேநேரத்தில் இந்த சிலைகள் திருத்தாளீஸ்வரர் கோயிலுக்கு உடமையான சிலைகளாக இருக்கலாம் என்றும், அந்நியர் படையெடுப்பின்போது இச்சிலைகளை ஊர் பெரியவர்கள் பூமியில் புதைத்திருக்கலாம் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். சிலைகள் கண்ெடடுக்கப்பட்டதும் சிலைகளுக்கு கிராம மக்கள் அபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொண்டனர். இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் உஷா ரஜினி கூறும்போது, ‘இந்த சிலைகள் தொன்மை வாய்ந்தவையாக உள்ளன. இவற்றின் தொன்மை குறித்து தொல்லியல்துறையினர் ஆய்வு செய்த பிறகுதான் தெரியும். தகவல் கலெக்டர் அலுவலகத்துக்கும், அறநிலையத்துறையினருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார். கோயில் திருப்பணியின்போது சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.