ஆடுகள் வரத்து குறைவு ரூ.9 லட்சத்திற்கு வர்த்தகம் ஒடுகத்தூர் வாரச்சந்தையில்
ஒடுகத்தூர், அக்.4: வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு, உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் தங்கள் வளர்க்கும் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால், வாரந்தோறும் ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடக்கிறது. அதேபோல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் மற்றும் திருவிழா போன்ற பண்டிகை நாட்களில் பல லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெறும். இதனாலேயே ஒடுகத்தூர் சந்தைக்கு தனி மவுசு உண்டு.
அதே சமயம் புரட்டாசி மாதத்தில் ஆடுகளின் வரத்து குறைவாக இருக்கும். இதனால் அந்த மாதம் முழுவதும் விற்பனையும் சற்று மந்தமாக காணப்படும். இந்நிலையில், இந்த வாரத்திற்கான ஆட்டு சந்தை நேற்று அதிகாலை கூடியது. புரட்டாசி மாதம் எதிரொலியால் கடந்த வாரங்களை விட இந்த வாரமும் ஆடுகள் வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் ஆடுகளின் விலையும் குறைந்து ஒரு ஜோடி ரூ.20 ஆயிரம் வரை விலை போனது. புரட்டாசி மாதம் என்பதால் ஆடுகளின் வரத்து குறைந்துள்ளது. புரட்டாசி மாதம் முடிந்த பிறகு தான் ஆடுகள் வரத்து அதிகமாக இருக்கும். நேற்று நடந்த சந்தையில் ரூ.9 லட்சத்துக்கும் குறைவாக தான் வர்த்தகம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.