வேலூர் சிறை அருகே பறந்த டிரோன் பறக்க விட்டது யார்? போலீசார் விசாரணை
வேலூர், டிச.3: வேலூர் சிறை அருகே பறந்த டிரோன் குறித்து போலீசார் யார் பறக்க விட்டது என்று விசாரித்து வருகின்றனர். வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் 800க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி சிறை வளாகத்திலும், அதன் அருகே டிரோன் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் சிறை சுற்றுச்சுவரின் அருகே அரியூர் செல்லும் சாலை பகுதியில் கடந்த 29ம் தேதி மாலையில் டிரோன் ஒன்றை மர்ம நபர்கள் பறக்க விட்டுள்ளனர். இதனை சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து கவனித்த காவலர், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறை அதிகாரிகள் அப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தனர். எனினும் டிரோனும், அதை பறக்க விட்ட மர்மநபர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக சிறை அலுவலர் சிவபெருமாள் பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரோனை பறக்கவிட்ட மர்மநபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.