வாலிபரிடம் 4 சவரன் செயின், செல்போன் பறிப்பு நாடகமாடிய நண்பர்கள் உட்பட 5 பேர் கைது பேரணாம்பட்டு அருகே கத்தியை காட்டி மிரட்டி
பேரணாம்பட்டு, ஆக.2: பேரணாம்பட்டு அடுத்த மதினாப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய்ராஜ்(26). இவரது நண்பர்கள் ஓணாங்குட்டையை சேர்ந்தவர்கள் சத்யராஜ்(22), கவுதம்(23), நந்தீஸ்(18), சூர்யா(21). இவர்கள் 5 பேரும் கடந்த மாதம் 27ம் தேதி இரவு பேரணாம்பட்டு- வீ.கோட்டா சாலையில் மலை அடிவாரத்தில் உள்ள இடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது, மது தீர்ந்துபோனதால் மீண்டும் வாங்குவதற்காக கவுதம், நந்தீஸ் ஆகிய இருவரும் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதற்கிடையில், முகமூடி அணிந்து கொண்டு பட்டா கத்தியுடன் வந்த 3 பேர் மது போதையில் இருந்த சஞ்சய்ராஜ், சத்யராஜ், சூர்யா ஆகியோரை தாக்கியுள்ளனர்.
பின்னர், சஞ்சய்ராஜ் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்து இருந்த நான்கரை சவரன் தங்கச்செயின், வெள்ளி பிரஸ்லேட் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் போலீஸ் ருக்மாங்கதன் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளை அடித்துச் சென்ற செல்போனின் டவரானது ஓணாங்குட்டையில் உள்ள சத்யராஜ் வீட்டை காண்பித்தது. அவரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை செய்ததில், சஞ்சய்ராஜின் நகைகளை கொள்ளை அடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. மேலும், கர்நாடக மாநிலம், பேத்தமங்கலத்தில் உள்ள ஜெலபதி(28) என்பவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து 5 பேரும் சேர்ந்து நகைகள் மற்றும் செல்போனை கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்களிடம் இருந்து செயின், கத்தி, 2 செல்போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், சத்யராஜ் உட்பட 5 பேரையும் நேற்று கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.