வனப்பகுதிக்குள் அனுமதியின்றி சாலை அமைத்த விவசாயி கைது ரூ.1 லட்சம் அபராதம்; வனத்துறை அதிரடி குடியாத்தம் அருகே விவசாய நிலத்திற்கு செல்ல
குடியாத்தம், நவ.1: குடியாத்தம் அருகே விவசாய நிலத்திற்கு செல்ல வனப்பகுதிக்குள் அனுமதியின்றி மண் சாலை அமைத்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட வனஅலுவலர் அசோக்குமார் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரகர் சுப்பிரமணியன் தலைமையில் வனத்துறையினர் சைனகுண்டா காப்புக்காடு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தனிநபர் ஒருவர் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் சமன் செய்து, மண் பாதை அமைத்து கொண்டிருப்பது தெரியவந்தது. அவரிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தை சேர்ந்த விவசாயி லிங்கையன் மகன் ராஜ்குமார்(38) என்பதும், அங்குள்ள தனது விவசாய நிலத்திற்கு செல்ல மண் பாதை அமைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர், அனுமதி இல்லாமல் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைத்ததற்காக ராஜ்குமார் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன், சாலை அமைக்க பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.