போக்சோ வழக்கில் 4 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்
வேலூர், நவ.1: போக்சோ வழக்கில் 4 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மட்டும் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வேலூர் மாநகரில் இயங்கி வரும் குழந்தைகள் நல காப்பகத்தில் தங்கி பயின்று வந்த சில சிறுமிகளுக்கு கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் அதே காப்பகத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வந்த ஜெபமணி(55) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகள் இதுபற்றி காப்பகத்தில் பணிபுரியும் இயன்முறை மருத்துவர், உதவியாளர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் டிரைவரின் பாலியல் தொந்தரவு அதிகரித்துள்ளது. இதையடுத்து சிறுமிகள் இதுபற்றி மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் அப்போதைய குழந்தைகள் நல அலுவலர் நிஷாந்தினி நடத்திய விசாரணையில் உண்மையை கண்டறிந்தார். தொடர்ந்து அவர் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக டிரைவர் ஜெபமணி, இவருக்கு உடந்தையாக இருந்ததாக பிரபாகரன், தனம், மோசஸ், உஷா ஆனந்தபிரியா ஆகியோர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து ஜெபமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் இடையிலேயே வழக்கின் முதல் குற்றவாளியான ஜெபமணி உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் நீதிபதி ராதாகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக பிரபாகரன், தனம், மோசஸ், உஷா ஆனந்தபிரியா ஆகிய 4 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மட்டும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.