2 பெட்டிக்கடைகளிலும் கைவரிசை: ஒடுகத்தூர் அருகே நள்ளிரவில் துணிகரம்
ஒடுகத்தூர், அக்.26: ஒடுகத்தூர் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், 2 பெட்டி கடைகளிலும் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வரதலம்பட்டு பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வனப்பகுதியை ஒட்டியவாறு அணைக்கட்டு செல்லும் சாலையோரம் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் ஒரு சூபர்வைசர் மற்றும் 2 விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் விற்பனையை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல், டாஸ்மாக் கடை அருகே இருந்த 2 பெட்டி கடைகளின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக, பொதுமக்கள் இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும், வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் மற்றும் போலீசார், கடை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.அப்போது, டாஸ்மாக் கடை மற்றும் அதன் அருகே இருந்த பெட்டி கடைகளின் ஷட்டர்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்து இருந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வனப்பகுதியை ஒட்டியவாறு உள்ள இந்த டாஸ்மாக் கடையில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் இருப்பு இருந்துள்ளது.