பைக் சாகசத்தில் ஈடுபட்ட பெங்களூரு மெக்கானிக் போலீசார் வழக்குப்பதிவு
வாணியம்பாடி, ஆக. 18: வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பெங்களூரு மெக்கானிக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றுமுன்தினம் வாலிபர் ஒருவர் மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டார். குறிப்பாக பைக்கின் பின் சீட்டில் அமர்ந்தபடியும், படுத்தபடியும் வாகனத்தை ஓட்டினார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் இதனை வீடியோ எடுத்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து வாணியம்பாடி டவுன் போலீசார் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து அந்த வாலிபர் குறித்து விசாரித்தனர். அதில், திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ்(23) என தெரியந்தது. பெங்களுருவில் டூவீலர் மெக்கானிக் வேலை செய்யும் இவர், விடுமுறைக்கு ஊருக்கு வந்த நிலையில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.