ஆன்லைனில் ரூ.11.46 லட்சம் இழந்த கல்லூரி பேராசிரியை வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் வாட்ஸ்அப்பில் வந்த லிங்க்கை கிளிக் செய்து
வேலூர், டிச.15: ஆன்லைன் டிரேடிங் ஆசை காட்டி வாட்ஸ்அப்பில் வந்த லிங்க்கை கிளிக் செய்து, ஆன்லைனில் ரூ.11.46 லட்சத்தை இழந்த கல்லூரி பேராசிரியை கொடுத்த புகாரின்பேரில், வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்தவர் 37 வயது இளம்பெண், தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு குறுந்தகவல் வந்தது. ஆதில் ஆன்லைன் டிரேடிங் செய்தால் அதிக கமிஷன் கிடைக்கும் எனவும், சிறிய தொகையை முதலீடு செய்தால் போதும் எனக்கூறி ‘லிங்க்’ அனுப்பியுள்ளனர். அந்த லிங்க்கை கிளிக் செய்து, ஒரு இணையத்தில் இணைந்தார்.
பின்னர் அதில் கொடுத்த தகவலின்படி கடந்த நவம்பர் 21ம் தேதி முதல் கடந்த 9ம் தேதி வரை என 19 நாட்களில் பல்வேறு தவணைகளாக ரூ.11 லட்சத்து 46 ஆயிரத்து 100ஐ குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். சில தினங்களில் அந்த பணத்திற்கு குறிப்பிட்ட கூடுதல் தொகை கிடைத்துவிட்டதாக தகவல் வந்தது. இதனால் அந்த பேராசிரியை, கணக்கில் இருந்த பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் எடுக்க முடியவில்லை. இதனால் அந்த லிங்க் இணைப்பில் உள்ளவர்களிடம் கேட்டபோது, மேலும் பணம் கட்டினால் பணம் திருப்பிதருவதாக தெரிவித்தனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பேராசிரியை, வேலூர் சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘சமூக வலைதளங்களில் வரும் பங்குச்சந்தை முதலீடு, பகுதி நேர வேலை போன்ற மோசடி விளம்பரங்களை பார்த்து பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பலர் இந்த மோசடிகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதில் படித்தவர்களே அதிகம் ஏமாறுகின்றனர் என்பது தான் வேதனை. எனவே மோசடி விளம்பரங்களை நம்பாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்றனர்.