மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றவர் கைது: அணைக்கட்டு அருகே மளிகை கடையில்
அணைக்கட்டு, ஆக. 11:அணைக்கட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாராயணபுரம் பகுதியில் பெட்டிக் கடைகளில் சிலர் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து விடுமுறை நாட்களில் அதிக அளவில் வியாபாரம் நடப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து நேற்று சப் இன்ஸ்பெக்டர் தர்மன் மற்றும் போலீசார் நாராயணபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள மளிகை கடையில் சோதனை செய்தபோது மதுபான பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த மதுபான பாட்டில்கள் மற்றும் கடையின் உரிமையாளரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில் ஊனை வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் காதர்நகரை சேர்ந்த கோவிந்தன் (48) பெட்டிக்கடை, மளிகை பங்க் கடை நடத்தி வந்ததும். அந்தப் பெட்டிக்கடையில் அரசு டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தனை கைது செய்த போலீசார் அவர் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதே போல் அந்த பகுதியில் வேறு ஏதாவது பெட்டிக்கடைகளில் மது பாட்டில்கள் பதுக்கி விற்கப்படுகிறதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.