காதல் திருமணம் செய்த பெண்ணை தாக்கி காரில் கடத்தல்:போலீசார் விசாரணை
வேலூர், செப்.3: வேலூரில் காதல் திருமணம் செய்த பெண் மற்றும் அவரது மாமியாரை தாக்கி காரில் கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வேலூர் அடுத்த அரியூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சூரியகாந்தி. இவரது மகன் பூர்ணம். அரியூர் திருமலைக்கோடி விஸ்வநாதன் நகரை சேர்ந்தவர் குமரேசன்(45). இவரது மகள் லாவண்யா. இதில் லாவண்யாவும், பூர்ணமும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் தரப்பில் எதிர்ப்பு இருந்ததால் கடந்த மாதம் 25ம் தேதி காதல்ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த 31ம் தேதி லாவண்யா, அவரது மாமியார் சூரியகாந்தி இருவரும் பொய்கை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த லாவண்யாவின தந்தை குமரேசன், வேலு(48), வேலரசன்(34), சதீஷ்(32) ஆகியோர் வழிமறித்து லாவண்யாவையும், அவரது மாமியார் சூரியகாந்தியையும் சரமாரியாக தாக்கினார்களாம்.
பின்னர் இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டு அப்துல்லாபுரம் விமான நிலையம் வழியாக ஊசூர் நோக்கி சென்றனர். இதில் சூரியகாந்தியை மட்டும் விமான நிலையம் அருகே காரில் இருந்து இறக்கி விட்டனர். லாவண்யாவை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து சூரியகாந்தி கொடுத்த புகாரின் பேரில் அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலரசனை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.