வேலூர் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டல் தொழிலாளி மீது போக்சோ வழக்கு
வேலூர், செப்.3: வேலூர் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தொழிலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 40வயது பெண். இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். மேலும், கணவரிடமிருந்து பிரிந்து 13 வயது மகளுடன் வசித்து வருகிறார். அவருடைய மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மேல்மொணவூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ரமேஷ் என்பவருடன் அந்த 40வயது பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.சில நாட்களுக்கு முன்னர் 13 வயது சிறுமிக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தன் தாயாருக்கு செல்போனில் சிறுமி தகவல் கூறியுள்ளார்.
உடனே அவர் ரமேசுக்கு போன் செய்து தன் மகளுக்கு காய்ச்சல் மாத்திரை கொடுக்கும்படி கூறியுள்ளார். அதன்படி மாத்திரை கொடுத்தபோது, ரமேஷ் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தாயிடம் கூறவே, தன் மகள் என்ற எண்ணத்தில் தான் சிறுமியை தொட்டதாக ரமேஷ் கூறியுள்ளார். இதுகுறித்து உறவினர் ஒருவரிடம் சிறுமி முறையிட்டுள்ளார். அவர் இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ரமேஷ் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.