போதை வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி பஸ் கண்டக்டரை தாக்கிய
பள்ளிகொண்டா, செப்.2: பள்ளிகொண்டா அருகே பஸ் கண்டக்டரை தாக்கிய போதை வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் குடியாத்தம் நோக்கி நேற்று மதியம் 2.15 மணியளவில் புறப்பட்டு சென்றது. குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை, காத்தாடிகுப்பம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் ராஜேஷ்(32), அரியூர் அடுத்த குப்பம் கிராமத்தை சேர்ந்த கண்டக்டர் கார்த்திகேயன்(25) ஆகியோர் பணியில் இருந்தனர். பொய்கை அருகே கண்டக்டர் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்க நடந்து சென்றுள்ளார். அப்போது, குடியாத்தம் அடுத்த ராமாலை பகுதியை சேர்ந்த ஜெகதீசன்(25) என்பவர் காலை நீட்டிக்கொண்டு இடையூறாக இருந்துள்ளார்.
மேலும், அவரது நண்பர்கள் சரத்குமார்(25), பிரசாந்த்(23) ஆகிய இருவரும் போதையில் தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டு வந்துள்ளனர். அவர்களிடம் கண்டக்டர் அமைதியாக பயணம் செய்யுங்கள் என கூறியுள்ளார். அப்போது, போதையில் இருந்த ஜெகதீசன் கண்டக்டர் கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் திட்டி திடீரென கன்னத்தில் பளார் விட்டுள்ளார். பின்னர், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அவர்களை விலக்கி விட்ட பயணிகள், கண்டக்டரை தாக்கிய ஜெகதீசனுக்கு தர்மஅடி கொடுத்து 3 பேரையும் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.