சேறும் சகதியுமாக மாறிய விசி காலனி சாலை
ஊட்டி, ஜூலை 10: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட விசி காலனி பகுதிக்கு செல்லும் சாலை, சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட விசி காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு செல்லும் மக்கள், பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து விசி காலனி செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இச்சாலையில், முனீஸ்வரர் கோயில் பகுதியில் சேறும், சகதியும் நிறைந்து சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இச்சாலையில் செல்லும் பள்ளி குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், இரவு நேரங்களில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறிவிழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. சில சமயங்களில் வாகனங்களில் செல்பவர்கள் சேற்றை வாரி அடிப்பதால், சாலை ஓரங்களில் நடந்து செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இச்சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் மற்றும் இப்பகுதி நகரமன்ற உறுப்பினர் வலியுறுத்தி வந்த போதிலும் நகராட்சி நிர்வாகம் இதனை கண்டுகொள்ளாமல் உள்ளது. எனவே சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.