ஓசூர் காமாட்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
ஓசூர், ஜூலை 6: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில், கல்யாண காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வருஷாபிஷேக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 16வது ஆண்டு வருஷாபிஷேக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக யாக சாலை அமைத்து ஆயுஷ்ய ஹோமம் நடைபெற்றது. இதில் முதலில் குழந்தைகள் சங்கல்பங்கள் செய்தனர். இதனைத் தொடர்ந்து கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு வலம் வந்தனர். பின்னர், 108 குழந்தைகள் வரிசையாக நின்று, ஒவ்வொருவரும், உற்சவ மூர்த்திகளான கல்யாண காமாட்சி மற்றும் ஏகாம்பரேஸ்வரருக்கு பால், தயிர், வெண்ணெய், நெய், சந்தனத்தால் அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில், ஓசூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் சுவாமியை தரிசனம் செய்தனர். ெதாடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.